மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு: விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். விரைவில் அது தொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். தமிழ்நாட்டில், டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பருவ மழை தவறி பெய்த காரணத்தால் அறுவடை செய்ய காத்திருந்த சம்பா உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டையில் பருவம் தவறிய மழை காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கின.

இதனையடுத்து, சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்திருந்தனர். மேலும், தமிழ்நாடு அரசு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. அந்தவகையில், ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இளம் பயிர் வகைகளுக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயிர் விதைகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு மேற்கோள்கின்றனர். அந்தவகையில், சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், ஓய் போயோ ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர். 3 பேர் அடங்கிய ஒன்றிய குழுவினர் நேற்று இரவு திருச்சி வந்தடைந்தனர். அவர்கள், டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் பயிர் சேதங்களின் மாதிரிகளை இன்று ஆய்வு செய்து, ஒன்றிய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பருவ மழை தவறி பெய்த காரணத்தால் அறுவடை செய்ய காத்திருந்த சம்பா உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

Related Stories: