விக்டோரியா கவுரியை கூடுதல் நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரியை கொலிஜியம் பரிந்துரைத்தது  செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக எட்டு பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. குறிப்பாக அந்த பட்டியலில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒன்றிய அரசின் வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் விக்டோரியா கவுரியை கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்த பரிந்துரைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் ராமச்சந்திரன் மற்றும் ஆனந்த் குரோவர் ஆகியோர் வாதத்தில், “விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்பது தொடர்பான அவரது தகுதிகளை ஆராய வேண்டி உள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பவர்கள் நீதிபதியாக பதவியேற்க கூடாது என தெரிவித்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா, ‘‘ஒரு உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமிக்கும் பொழுது உச்ச நீதிமன்ற கொலிஜியம் அந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளிடமிருந்து கருத்துக்களை கேட்பார்கள். அந்த கருத்துக்களும் கொலிஜியம் அமைப்பால் ஆராயப்படும். ஆனால் நீங்கள் சொல்லக்கூடிய இந்த குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமல் இருந்திருக்குமா? இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்களையும் ஆராய்ந்து தான் கொலிஜியம் பரிந்துரையை வழங்கி உள்ளது.

மேலும் நான் மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக இருக்கிறேன். ஆனால் ஒரு நீதிபதியாக எனது அரசியல் பார்வையை நான் இதுவரை தவற விட்டதில்லை. இது விக்டோரியா கவுரி விவகாரத்தில் ஏன் பொருந்தக்கூடாது’’ என தெரிவித்தார்.இதற்கு பதலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘விக்டோரியா கவுரி அரசியல் பின்புலம் கொண்டவர் என்பது பிரச்னை கிடையாது. மாறாக அவர் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை பேசியவர். அவர் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பது தான் முக்கிய காரணம் என்பது மட்டுமில்லாமல் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது’’ என தெரிவித்தார். நீதிபதிகள் கூறியதில், ‘‘விக்டோரியா கவுரியை உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது.

ஆனால் அதற்கு எதிராக இறுதியான நேரத்தில் மனு தாக்கல் செய்து , அவரது பதவியேற்புக்கு தடை கேட்கிறீர்கள். அதனால் இதுபோன்ற சூழலில் நாங்கள் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மேலும் கொலிஜியம் அமைப்பிற்கு எங்களால் உத்தரவுகளையோ அல்லது வழிகாட்டுதல்களையோ தர இயலாது. அதே நேரத்தில் தற்பொழுது விக்டோரியா கவுரி கூடுதல் நீதிபதியாக தான் இருக்கின்றார். அவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பொழுது அதற்கு முன்பாக ஒரு வருடத்திற்கு அவருடைய செயல்பாடுகள் உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பால் ஆராயப்படும். அதனால் இந்த ரிட் மனுக்களை நாங்கள் விசாரிக்க மறுக்கிறோம். மேலும் இது தற்போதைய நிலையில் விசாரணைக்கு உகந்ததும் கிடையாது எனக்கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, இதுதொடர்பான காரணங்கள் பின்னர் விரிவாக வழங்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: