காதல் திருமண விவகாரத்தில் தலைகீழ் திருப்பம் கடத்தப்பட்ட பெண் ஐகோர்ட் கிளையில் ஆஜர்: வேறொருவருடன் நடந்த திருமணத்துக்கு ஆதாரமில்லாததால் காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெற அதிரடி உத்தரவு

மதுரை: காதல் திருமண விவகாரத்தில் கடத்தப்பட்ட பெண், ஐகோர்ட் கிளையில் ஆஜரானார். அப்போது, தனக்கு கடந்தாண்டே வேறொருவருடன் திருமணம் நடந்ததாக கூறினார். ஆனால், அதற்கான ஆதாரத்தை அவர் அளிக்கவில்லை. இதனால், அவரை காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெற வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இலஞ்சியைச் சேர்ந்த கிருத்திகா படேலை காதலித்து, கடந்த ஜன.20ல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கடந்த 25ம் தேதி அவரது பெற்றோர், என்னை தாக்கி விட்டு கிருத்திகாவை கடத்திச் சென்று விட்டனர். கிருத்திகாவை மீட்டு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில், ‘‘12 பேர் மீது வழக்கு பதிந்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படையினர் குஜராத் சென்றுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் ஆகியோர் நேற்று பிற்பகல் வழக்கம் போல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அரசு கூடுதல் வக்கீல் மீனாட்சி சுந்தரம் ஆஜராகி, ‘‘கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா குற்றாலம் போலீசாரிடம் ஆஜரானார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம்’’ என்றார். அப்போது நீதிபதிகள், கிருத்திகாவிடம் விசாரித்தனர். தனக்கு மைத்ரிக் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதால், தாமாக குஜராத் சென்றதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், ‘‘குஜராத்தில் திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா’’ என்றனர். தற்போது ஆதாரங்கள் இல்லை என கிருத்திகா கூறினார். உடனே நீதிபதிகள், ‘‘மைத்ரிக்குடன் திருமணம் நடந்தது என்றால், ஏன் வினித்தை திருமணம் செய்ய வேண்டும்? இதன் பிறகு ஏன் குஜராத் செல்ல வேண்டும். இதில் முரண்பாடு உள்ளது. மனுதாரர் கிருத்திகாவை திருமணம் செய்ததற்கான படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கடந்தாண்டு மைத்ரிக்குடன் குஜராத்தில் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கிருத்திகா நல்ல மனநிலையில் யாருடைய அழுத்தமின்றி இருக்க வேண்டும். அவரை குற்றாலம் நன்னகரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும். விசாரணை அதிகாரி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் அல்லது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறி, விசாரணையை பிப். 13க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: