நீயா? நானா? போட்டியால் நீண்ட இழுபறிக்கு பின் கடைசி நாளில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்: ஓபிஎஸ் அணி, பாஜ நிர்வாகிகள் புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளராக கேஎஸ் தென்னரசு அறிவிக்கப்பட்டார். இதேபோல ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். இரண்டு அணிகளும் போட்டியிட முயற்சி செய்ததால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோர்ட் உத்தரவுபடி பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் வேட்பாளராக தென்னரசு தேர்வு செய்யப்பட்டார். இபிஎஸ் அறிவித்த வேட்பாளரை ஏற்க முடியாது என திடீரென அறிவித்த ஓபிஎஸ், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடித்ததையும் நிராகரித்தார். இதையடுத்து, பாஜ நடத்திய பஞ்சாயத்துக்கு பிறகு ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், டெல்லி சென்ற தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழு உறுப்பினர்களின் வேட்பாளர் ஆதரவு கடித ஆவணங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடித்தத்தில், ‘அதிமுக வேட்பாளருக்கான படிவங்களில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போட்ட படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த உத்தரவு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்’ என குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது வேட்புமனுவை இறுதி நாளான நேற்று மதியம் 12.15 மணியளவில் மாநகராட்சியில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் தாக்கல் செய்தார். வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், பகுதி செயலாளர் மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பாவை அருணாச்சலம், தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாற்று வேட்பாளராக தென்னரசு மனைவி பத்மினி தாக்கல் செய்தார்.

அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் பாஜவை தொடர்ந்து புறக்கணித்தே வருகின்றனர். நேற்றும் வேட்புமனு தாக்கலின்போது பாஜ நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘இதுவரை நாங்கள் கூட்டணியை இறுதி செய்யவில்லை. பாஜ கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகளை நாங்கள் வீணாக இழக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த தேர்தலில் தோற்றதற்கு காரணம் பாஜதான். எனவேதான் புறக்கணித்துள்ளோம்’’ என்றனர். இதேபோல், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

* பிரசாரம் துவக்கம்

அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே, நேற்று காலை பிரசாரத்தை தொடங்கினார். இபிஎஸ் அணி தேர்தல் பணிக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில், ஈரோடு மணல்மேடு பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கிய தென்னரசு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

* விமானத்தில் பறந்து வந்த ‘ஏ, பி பார்ம்’

அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசுவிற்கு தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்ட “ஏ மற்றும் பி படிவங்கள்” நேற்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், கோவையில் இருந்து ஈரோடு கொண்டு வரப்பட்ட படிவம் வேட்புமனுவுடன் இணைத்து நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

Related Stories: