இங்கு போட்டி என்பதே இல்லை இரட்டை இலை சின்னத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி 23வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டங்களால் மக்கள் கவரப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போதும், அவர்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டனர். அப்போதும் முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் ஓட்டு கிடைத்தது. ஈரோடு மாநகராட்சி தேர்தலிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டனர்.

எத்தனை மாநகராட்சியை அவர்கள் கைப்பற்றினார்கள். இப்போதுகூட எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சந்திப்பாரா? பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா? என்பதை பற்றிதான் விவாதிக்கின்றனர். இவர்கள் சந்தித்தால், நாட்டின் பொருளாதாரம் சுபிட்சமாகி, 100 சதவீதம் உயர்ந்துவிடவா போகிறது? இங்கு போட்டி என்பதே இல்லை. இத்தனை ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர்கள் கூறட்டும். டிடிவி தினகரன் கட்சியினர் கடந்த தேர்தலில் இத்தொகுதியில் 1,500 ஓட்டு பெற்றனர். அதைவிட நோட்டோ அதிகம் ஓட்டு பெற்றது. இந்த தேர்தலில் மட்டுமல்ல. வரும் பாராளுமன்ற தேர்தலிலும் முழுமையாக 39 தொகுதியிலும் திமுக, தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.

Related Stories: