லஞ்ச வழக்கில் கைதான சார்பதிவாளர் வீட்டில் ரெய்டு

தேனி: தேனி அல்லி நகரத்தில் குடியிருக்கும் சேலம் மாவட்ட தாதகாப்பட்டி சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தேனி அல்லி நகரத்தில் உள்ள ஹைஸ்கூல் தெருவில் குடியிருப்பவர் செல்லபாண்டியன். இவர் சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் சார் பதிவாளராக பணி புரிந்து வருகிறார். அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பெயர் மாற்றம் செய்வதற்காக வந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நேற்று முன்தினம் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அம்ப்ரோஸ் ஜெயச்சந்திரன், சூரியகலா ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார், தேனி அல்லி நகரத்தில் உள்ள சார்பதிவாளர் செல்லப்பாண்டியன் வீட்டிற்கு வந்து சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: