20 ஆண்டுகளில் பாஜவுக்கு எவ்வளவு நிதி தந்தார் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? மக்களவையில் ராகுல் சரமாரி கேள்வி

புதுடெல்லி: ‘‘ பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது?’’ என மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். அதானி குழுமத்தின் மீதான பங்குச்சந்தை மோசடி விவகாரம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தால் தொடர்ந்து 3 நாட்கள் இரு அவைகளும் முடங்கிய நிலையில், நேற்று அவை செயல்பாடுகளில் பங்கேற்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 15 கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்தன.  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில்  எதிர்க்கட்சி எம்பியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அவர் கூறியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரையின் மூலம் நாட்டின் சாமானிய மக்களின் குரலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த யாத்திரையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.  நாட்டின் இளைஞர்களைப் பொறுத்த வரை, அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மைதான். சரியான வேலை கிடைக்காததால் அவர்களில் பலர் வாகன ஓட்டுநர்களாக இருக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலம் அபகரிக்கப்படுவதை பற்றி வேதனை தெரிவித்தனர். ஓய்வு பெற்ற மூத்த ராணுவ வீரர்களை சந்தித்த போது, அக்னிவீரர்கள் திட்டம் நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் என வருத்தம் தெரிவித்தனர்.

இந்த திட்டம் ராணுவத்தின் முடிவல்ல என்றும், ஆர்எஸ்எஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் யோசனையில் வந்ததாகவும் குற்றம்சாட்டினர். இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு இளம் வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அதன் பின் அவர்களின் நிலை என்னவாகும் என்பதற்கு பதில் இல்லை. இது வன்முறையை தான் அதிகரிக்கச் செய்யும். நாடு முழுவதும் எல்லா மக்களும் அதானி பற்றித்தான் பேசுகிறார்கள். அவர் நுழையும் ஒவ்வொரு துறையிலும் எப்படி வெற்றி பெறுகிறார், ஒருமுறை கூட அவர் தோற்கவில்லை எப்படி என ஆச்சரியமாக கேட்கின்றனர்.

அதானி குழுமம் இப்போது துறைமுகம், விமான நிலையம், கேஸ் என 10க்கும் மேற்பட்ட துறைகளில் தொழில் செய்கிறது. இதனால், 2014ல் ரூ.65 ஆயிரம் கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு 2022ல் ரூ.11 லட்சம் கோடியாக அதிகரித்தது எப்படி என்று இளைஞர்கள் எங்களிடம் கேட்கின்றனர். அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும் என்று இருந்த விதிமுறையை 2014ல் பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு மாற்றியது. அதன் பின்னர்தான் 6 விமான நிலையங்கள் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், சிபிஐ, அமலாக்கத்துறை வைத்து சில நிறுவனங்களை மிரட்டி, லாபகரமான மும்பை விமானத்தையும் அதானி வசம் பாஜ அரசு தந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டின் பிரதமரே செய்துள்ளார்.

பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி, அம்பானி நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்கிறது. பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள தொடர்பு என்ன? வெளிநாட்டு பயணத்தில் பிரதமர் மோடியுடன் அதானி எத்தனை முறை ஒன்றாக பயணித்துள்ளார்? வெளிநாட்டிற்கு சென்ற பிறகு அங்கு எத்தனை முறை அதானி, மோடியை சந்தித்து இருக்கிறார்? பிரதமரின் எந்தெந்த வெளிநாட்டு பயணங்களுக்குப் பிறகு அந்நாடுகளில் அதானி ஒப்பந்தம் பெற்றார்? கடந்த 20 ஆண்டுகளில் பாஜவுக்கு அதானி எவ்வளவு கட்சி நிதி கொடுத்துள்ளார்? பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதில் இருந்தே அதானி உடனான நட்பு தொடர்கிறது. பின்னர் மோடி பிரதமராகி டெல்லி வந்த பிறகுதான் மாயாஜாலம் நடந்தது. 2014ல் உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2022ல் 2ம் இடத்திற்கு முன்னேறினார்.

 

பங்குச்சந்தையில் அதானி குழுமம் பல மோசடி செய்துள்ளதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளது. அதில், பல வெளிநாடுகளில் அதானி போலி நிறுவனங்களை நடத்தி வருவதாக கூறி உள்ளது. இது தேச பாதுகாப்பு பிரச்னை. இது குறித்து ஒன்றிய அரசு எப்போது விசாரிக்கும்? எச்ஏஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் டிரோன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார். ஆனால் அதன் பின் டிரோன் தயாரிப்பு ஒப்பந்தத்தை அனுபவமே இல்லாத அதானி நிறுவனம் பெறுகிறது.

இதே போல, வங்கதேசம், இலங்கை போன்ற பல வெளிநாட்டு பயணங்களிலும் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு அதானி நிறுவனங்கள் அங்கு பல ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. இதற்காக, அதானிக்கு எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் கடன் தருகின்றன. அதானி குழும பங்குகள் வீழ்ச்சி அடைந்த பிறகும் கூட பொதுத்துறை நிறுவனங்கள் அதில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்கின்றன. இதற்கெல்லாம் அரசின் பதில் என்ன? இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தனது பேச்சின் போது ராகுல், விமானத்தில் பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் அவையில் காட்டினார். ஆனால் ராகுலை பேச விடாமல், ஆளுங்கட்சி எம்பிக்கள், அமைச்சர்கள் கடுமையாக குறுக்கிட்டு அமளி செய்தனர். ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது’’ என்றார். ‘நாட்டை ஒன்றிணைக்கும் முன்பாக முதலில் ராஜஸ்தானில் உங்கள் கட்சியை ஒன்றிணையுங்கள்’ என பாஜ எம்பி சி.பி.ஜோஷியும் குறுக்கிட்டு பேசியதால் அவையில் பரபரப்பு நிலவியது.

பிரதமருக்கு ராகுல் கேட்ட 4 கேள்விகள்

* பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள தொடர்பு என்ன?

* வெளிநாட்டு பயணத்தில் பிரதமர் மோடியுடன் அதானி எத்தனை முறை ஒன்றாக பயணித்துள்ளார்?

* மோடி வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதும் அந்த நாட்டிற்கு சென்ற அதானி எத்தனை கான்டிராக்ட்களை பெற்றார்?

* கடந்த 20 ஆண்டுகளில் பாஜவுக்கு அதானி எவ்வளவு கட்சி நிதி கொடுத்துள்ளார்?

* ஆதாரமற்ற குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த பாஜ தலைவர் ரவிசங்கர் பிரசாத், ‘‘பிரதமர் மோடி மீது ராகுல் ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அனைத்து பெரிய ஊழல்களிலும் காங்கிரசும் அதன் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்’’ என்று அவர் குற்றம் சாட்டினார்.

Related Stories: