சென்னை: மீன்வளத்துறையில் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 10 மையங்களில் கணினி வழியில் இன்று நடக்கிறது. 64 பதவிகளுக்கு நடத்தப்படும் இத்தேர்வை 3549 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 3549 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் ஆண்கள் 1714 பேர், பெண்கள் 1834 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஓருவர் அடங்குவர். இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு கணினி வழியில் இன்று நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது. முதல் தாள் தேர்வில் மீன்வள அறிவியல்(பட்டப்படிப்பு தரம்), விலங்கியல்(பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடைபெறுகிறது. இதில் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண் வழங்கப்படும். பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. அதாவது பகுதி”அ” வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும்(10ம் வகுப்பு தரம்), பகுதி”ஆ” பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது.
இதில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முக தேர்வு மற்றும் ஆவணங்களுக்கு 60 மதிப்பெண்கள் என 510 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த கணினி வழித்தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 10 மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் ஒரு மையத்தில் இந்த தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் இந்த தேர்வை 884 பேர் எழுதுகின்றனர் ஒரு தேர்வு மையத்திற்கு ஒருவர் வீதம் 10 முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கணினி வழித்தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது.