சென்னை: சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக 10 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று காலையில் அதிகமான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் ஓடுபாதை தெளியாக தெரியவில்லை. அந்த நேரத்தில் சென்னைக்கு வந்த பெங்களூரு, ஐதராபாத், மும்பை, துபாய், இலங்கை, மலேசியா, எத்தியோபியா ஆகிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்டநேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அப்போது, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டனர். அப்போது அதிகாரிகள், ‘சிறிது நேரத்தில் வானிலை தெளிவாகிவிடும்’ என்று கருதி விமானங்களை தொடர்ந்து வானில் வட்டமடிக்கச்செய்தனர். ஆனால் நீண்டநேரமாக வானிலை சீரடையவில்லை.
எரிபொருள் குறைவாக இருந்ததாலும், பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அடிஸ் அபாபாவிலிருந்து வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் இலங்கை, மலேசியா, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், நீண்டநேரம் வட்டமடித்து கொண்டிருந்தது. காலை 9 மணிக்கு மேல் வானிலை சீரடைந்ததும், ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. ஆனால் சென்னையில் இருந்து புறப்படவேண்டிய விமானங்கள் பெரிய அளவில் காலதாமதம் ஏற்படவில்லை. டெல்லி, கொல்கத்தா, சீரடி போன்ற ஒரு சில விமானங்கள் மட்டும் சிறிதுநேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.