இரவு-பகலாக குடித்து கும்மாளமிடும் மதுப்பிரியர்கள்; போதை கும்பலின் கூடாரமாக மாறும் குழித்துறை சாலை: கேலி கிண்டல் செய்வதால் பெண்கள் அச்சம்

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 8வது வார்டு பகுதிக்கு உட்பட்ட லெட்சுமி திரையரங்கம் அருகே குறுகிய சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை வழியாக குழித்துறை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு எளிதாக சென்றுவிடலாம் என்பதால் ஏராளமான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். இந்த பகுதியின் அருகே மதுபான கடை ஒன்று செயல்படுகிறது.

அங்கிருந்து மதுபாட்டில்களை வாங்கிவரும் மதுப்பிரியர்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் இந்த சாலையோரத்தில் அமர்ந்துகொண்டு மது அருந்துகின்றனர். வாங்கினோம், குடித்தோம் என்று இல்லாமல், சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளிடம் கேலி கிண்டல் செய்து அத்துமீறுகின்றனர். இதனால் பெண்கள் இந்த சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதேபோல் இங்கு திருட்டுத்தனமாக மதுபானம் விற்கும் அவலமும் அரங்கேறுகிறது.

மேலும் நள்ளிரவில் இப்பகுதியில் முகாமிடும் மதுபோதை கும்பல் அருகில் இருக்கும் மின் விளக்குகளை உடைக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் அப்பபகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த சாலை மாறிவருகிறது. எனவே மதுபோதை கும்பல்களால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு போலீசார் அடிக்கடி ரோந்து வந்தால்தான் சமூக விரோதிகளை இங்கிருந்து அடித்து விரட்ட முடியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: