மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கொடூரனுக்கு வாழ்நாள் சிறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. வாய் பேச இயலாத, மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இவரது பெற்றோர் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்கின்றனர். இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டி பராமரிப்பில் உள்ளார். கடந்த 18.3.2015 மாலை 5 மணியளவில் சிறுமி வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். இதனால் அவரது பாட்டிஅருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டார். அப்போது செங்கம் தாலுகா, நயம்பாடி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனுநீதி(58) என்பவர் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை தூக்கிக்கொண்டு, அருகில் உள்ள கரும்புத் தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் சத்தம் கேட்டு அங்கு விரைந்து சென்றனர். இதை பார்த்த மனுநீதி தப்பி ஓடிவிட்டார். அதைத்தொடர்ந்து, சிறுமியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, போளூர் மகளிர் போலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ மற்றும் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மனுநீதியை கைது செய்தனர்.திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில் மனுநீதிக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் மற்றொரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது என்பதால், தண்டனை விதிக்கப்பட்ட மனுநீதி, தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இரட்டை ஆயுள் தண்டனையில் உரிய காலம் முடிந்தாலும் அவரால் சிறையில் இருந்து வெளியில் வர இயலாத நிலையை இந்த தீர்ப்பு உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: