கேரள சட்டசபையில் 2வது நாளாக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் நேற்று தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடக்கிறது.கேரள சட்டசபையில் கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ₹2 வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. இது தவிர மேலும் பல பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. இதை கண்டித்து நேற்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்வை வாபஸ் பெறும் வரை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஷாபி, மேத்யூ, மகேஷ், நஜீப் ஆகிய 4 எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.சட்டசபையின் முக்கிய வாசல் அருகே எம்எல்ஏக்கள் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்தநிலையில் போராட்டம் நடத்தி வரும் எம்எல்ஏக்களை கேரள சபாநாயகர் ஷம்சீர், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.

Related Stories: