சிறுவனை மிரட்டி பாலியல் வன்புணர்வு: திருநங்கைக்கு 7 வருடம் கடுங்காவல் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு சாம்சன் (34). திருநங்கை. கடந்த 2016ம் ஆண்டு சிறையின்கீழில் இருந்து ரயிலில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ரயில் திருவனந்தபுரத்தை அடைந்ததும் மாணவனை மிரட்டி கழிப்பறைக்கு அழைத்து சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார்.

பின்னர் மாணவனின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார் சஞ்சு சாம்சன். தொடர்ந்து போன் மூலம் தான் கூறும் இடத்திற்கு வர வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.

ஆனால் மாணவன் பயந்து செல்லவில்லை. இந்த விவரம் மாணவனின் தாய்க்கு தெரியவந்தது. இது குறித்து திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து திருநங்கை சஞ்சு சாம்சனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த சம்பவம் நடந்த சமயத்தில் தான் திருநங்கையாக மாறிவிட்டதாகவும், எனவே மாணவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக போலீசார் கூறுவது பொய் என்றும் சஞ்சு சாம்சன் விசாரணையின் போது வாதிட்டார்.

ஆனால் கைது செய்த சமயத்தில் சஞ்சு சாம்சனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது திருநங்கையாக மாறவில்லை என்றும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுதர்சன், திருநங்கை சஞ்சு சாம்சனுக்கு 7 வருடம் கடுங்காவல் சிறையும், ₹25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஒரு போக்சோ வழக்கில் திருநங்கைக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது கேரளாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: