சக பெண் ஊழியரை திருமணம் செய்வதாக கூறி 2 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சட்டப்பல்கலைக்கழக நூலகர் மீது கற்பழிப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னை: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பெண் நூலகரை திருமணம் செய்வதாக கூறி 2 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சக நூலகர் மீது, அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நூலகராக பணியாற்றி வருகிறார். இவருடன் திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த மணியரசு(29) என்பவர் நூலகராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வருவதால், இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மணியரசுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் நூலகர் ராணிக்கு தெரியவந்தது. உடனே தனது காதலனான மணியரசுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் பல காரணங்களை கூறி திருமணம் செய்ய மறுத்து, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெண் நூலகர் ராணி, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது காதலன் மணியரசு மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன்னை காதலித்து பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இதனால் இரண்டு முறை கர்ப்பமானேன். உடனே கர்ப்பத்தை 2 முறையும் கலைத்தார். பிறகு என்னை திருமணம் செய்ய மறுத்து வேறு ஒரு பெண்னை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்ளும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக நூலகர் மணியரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பெண் நூலகர் மணியரசுவால் இரண்டு முறை கர்ப்பம் தரித்து அதை மணியரசு வலியுறுத்தலின்பேரில் அழித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், பெண் நூலகரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து ஏமாற்றியதும் உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக நூலகர் மணியரசு மீது ஐபிசி 376(கற்பழிப்பு), 312(கர்ப்பத்தை கலைத்தல்), 417 (ஏமாற்றுதல்), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக பெண் ஊழியரை நூலகர் ஒருவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை கர்ப்பமாக்கி அதை கலைத்த விவகாரம் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: