வடலூர் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம்

வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 5ம் தேதி ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனம் நடைபெறுவதையொட்டி வடலூர் சத்தியஞானசபையில் இருந்து (பேழை) வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி மற்றும் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

மேட்டுக்குப்பத்துக்கு செல்லும் வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும், செங்கால் ஓடையில் நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களும், அதை தொடர்ந்து கருங்குழி கிராமத்தினரும் மலர் தூவி பழங்கள் உடன் வரவேற்றனர். தொடர்ந்து மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருவறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டு செல்லப்பட்டு அங்கு கிராம மக்கள் சார்பில் பழம் பூக்களுடன் திரண்டு வரவேற்றனர். இதையடுத்து வள்ளலார் சித்திபெற்ற திருஅறையினுள் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது.

Related Stories: