சிவன்மலை கோயில் தைப்பூச திருவிழா: ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்த காளை மாட்டுடன் பாதயாத்திரை

திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்த காளை மாட்டுடன் பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. இத்திருவிழாவையொட்டி காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கிராம மக்கள் குழுவாக சேர்ந்து விரதம் இருந்து, காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

ஒரு சிலர் தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு வந்தனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்திருந்தது பக்தர்களை கவர்ந்தது. மேலும் ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் சிவன்மலை முருகன் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். காவடி குழுவினர் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சிவன்மலை பகுதியில் ஆங்காங்கே கூடாரம் போட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர். இத்திருவிழாவையொட்டி சிவன்மலை பகுதியெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து காணப்பட்டது.

Related Stories: