ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்: மக்களவையில் காங். எம்.பி. ராகுல்காந்தி உரை

டெல்லி: ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசினார். அப்போது பேசிய அவர், இந்திய ஒற்றுமை பயணத்தின்போது நாட்டு மக்களின் குரலுக்கு செவி கொடுத்தேன். தனது கருத்துக்களை மக்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஒற்றுமை பயணத்தின்போது கிடைத்தது.

மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டேன்:

ஒற்றுமை நடை பயணத்தின்போது மக்கள் பிரச்சனைகளை ஆழமாக புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஒற்றுமை நடை பயணத்தின்போது பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன். விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சின்னஞ் சிறுவர்கள், முதியவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்டேன் என கூறினார்.

அக்னிவீர் திட்டத்தை மக்கள் விரும்பவில்லை:

ஒப்பந்த அடிப்படையில் படைகளில் சேர்க்கும் அக்னிவீர் திட்டத்தை மக்கள் விரும்பவில்லை. அக்னிவீர் திட்டத்தால் இளைஞர்கள் அஞ்சுகின்றனர். அக்னிவீர் திட்டம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் என மக்கள் தெரிவித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதானி விவகாரத்தைதான் நாடே பேசுகிறது:

ஒட்டுமொத்த நாடும் அதானி விவகாரம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 2014ல் 8 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2022ல் 140 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதானி குழுமத்தின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

மக்களின் குற்றச்சாட்டுகள்:

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை குறித்தும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் உரையில் வேலைவாய்ப்பின்மை என்ற வார்த்தையே இல்லை. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினர். விலையேற்றம், விவசாய பாதிப்பு நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார்.

அதானிக்கும், பிரதமருக்கும் என்ன தொடர்பு?:

அதானிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எல்லா தொழில்களிலும் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அதானி இத்தனை தொழில்களை உருவாக்க யார் உதவினார்கள்? அதானியின் சொத்து மதிப்பு ஒரு சில ஆண்டுகளிலேயே மளமளவென உயர்ந்தது எப்படி? என வினவினார்.

அதானி மட்டுமே எப்படி வெற்றி பெறுகிறார்?

அனைத்து தொழில்களிலும் அதானி மட்டுமே வெற்றி பெறுகிறார் என்றால், அதற்கு என்ன காரணம்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழுமத்தை கட்டாயப்படுத்தி விமான நிலையங்களை மோடி அரசு கொடுக்கிறது என்று சாடினார்.

தொழிலதிபர் அதானி வளர்ச்சி: மோடி மீது குற்றச்சாட்டு

முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை மோடி அரசு மாற்றியுள்ளது. அதானிக்காகவே மோடி அரசு விதிமுறைகளில் திருத்தம் செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொண்டால், அங்கு அதானி நிறுவனம் தொழில் தொடங்க அனுமதி கிடைக்கிறது. இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி முதலில் செல்கிறார்; அதற்கு பின்னர் அதானி செல்கிறார், எதற்காக? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது அதானியின் வெளியுறவு கொள்கையாக மாறிவிட்டது. பிரதமர் மோடி வங்கதேசம் சென்று வந்த பிறகு, அதானிக்கு மின் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்கள் யாருடையது எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியை பேசவிடாமல் பாஜக எம்.பி.க்கள் அமளி:

அதானி விவகாரம் குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேசவிடாமல் குறுக்கீடு செய்து பாஜக எம்.பி.க்கள், ஒன்றிய அமைச்சர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories: