திருமயம் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு

திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரசித்தி பெற்ற குடைவரை பெருமாள், சிவன் கோயில்கள் உள்ளன. மேலும் மன்னர் காலத்து கோட்டைகள், கோட்டையைச் சுற்றி அகழி, ஆங்கிலேயர் காலத்து பீரங்கிகள் உள்ளது. இதனால் திருமயத்திற்கு உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர்.

மேலும் அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ளதால் சுற்றுவட்டார கிராம பொதுமக்களுக்கு திருமயம் தவிர்க்க முடியாத ஊராக உள்ளது. அதேசமயம் தஞ்சாவூர், ராமேஸ்வரம், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு திருமயம் வழியாக பஸ்கள், வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதனால் திருமயத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாலை ஓரம் கேட்பாரற்று சுற்றி தெரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வந்தனர். திருமயம் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி பகுதிகளில் பகல் நேரம் மட்டுமல்லாது இரவு நேரங்களில் சாலையின் நடுவே கால்நடைகள் கூட்டம் கூட்டமாக படுத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

சில சமயம் கால்நடைகள் சாலையில் படுத்திருப்பதை அறியாத வாகன ஓட்டிகள் கால்நடை மீது வாகனத்தை மோதி விபத்தில் சிக்குகின்றனர்.இதனால் திருமயம் பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் தற்போது கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமாக கால்நடை உரிமையாளர்களை எச்சரிக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை.

இதனால் ஊராட்சி நிர்வாகம் தற்போது திருமயம் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு அபராதம் விதிப்பது என முடிவு செய்துள்ளது. இதன்படி வரும் 10ம் தேதி முதல் திருமயம் பகுதியில் கேட்பாரற்று சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பவர்களுக்கு ரூ. 200 வழங்கப்படும். அதேசமயம் கால்நடை உரிமையாளர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து கால்நடையை மீட்க ரூ. 1000 செலுத்த வேண்டும் எனவும் 3 நாளைக்கு மேல் ஊராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்ட கால்நடைகளை உரிமை கோராத கால்நடைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் திருமயம் காவல் நிலையம், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விட்டதாக ஊராட்சி தலைவர் சிக்கந்தர் தெரிவித்தார்.

எனவே திருமயம் குடியிருப்பு வாசிகள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வளர்ப்பதோடு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிவதை தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: