ஒரு வருடத்தில் 600 பெண்கள் பலாத்காரம் ஆந்திராவை பின்தங்கிய மாநிலமாக மாற்றியவர் முதல்வர்

*சித்தூரில் தெ.தேசம் கட்சி பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

சித்தூர் : ஆந்திராவை இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக முதல்வர் ஜெகன்மோகன் மாற்றியுள்ளார். மேலும், ஒரு வருடத்தில் 600 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக சித்தூரில் பாத யாத்திரை மேற்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோேகஷ் குற்றம் சாட்டியுள்ளார்.  

தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாராலோகேஷ் ஆந்திர மாநிலம் முழுவதும் 400 நாட்கள் 4 ஆயிரம் கி.மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். இதையொட்டி, கடந்த மாதம் 27ம் தேதி குப்பம் பகுதியில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டார். தொடர்ந்து, 11வது நாட்களாக நேற்று சித்தூர் மாநகரத்திற்கு வந்தார்.   அவரை அக்கட்சியினர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர்.

அப்போது, நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலம் இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக முதல்வர் ஜெகன்மோகன் மாற்றி விட்டார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. அவரது ஆட்சியில் செம்மரக்கட்டை கடத்தல், மணல் கடத்தல், பலாத்காரம், கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டவை அதிகளவில் நடக்கின்றன. முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த 2014-2019ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போது சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை திறந்து வைத்தார். சிட்டியில் பைக்க தொழிற்சாலை, மொபைல் போன் தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை உள்ளிட்டவை கொண்டு வந்தார்.

அனந்தபூர் மாவட்டத்தில் பிரபல கார் நிறுவனத்தை கொண்டு வந்தார். ஆனால், முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் இந்த 4 ஆண்டுகளில் ஒரு தொழில் நிறுவனம் கூட முதலீடு செய்ய முன்வரவில்லை. ஒரு தொழிற்சாலை கூட அமைக்கவில்லை. ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய முன் வந்தது. அவர்களிடம் முதல்வர் ஜெகன்மோகன் பங்கு கேட்டதால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவில்லை.

மது ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். படிப்படியாக மதுபான கடைகளை மூடி நிரந்தரமாக மது தடை செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால், இதுவரை மதுபான கடைகள் தடை செய்யவில்லை. மாநில அரசே மதுபான கடைகளை நடத்தி வருகிறது. ஆளும் கட்சியினரின் பினாமிகளின் பெயரிலேயே மதுபான தொழிற்சாலைகள் நடத்தி அவர்களே விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

மத்திய அரசு பெண்களின் நலத்திட்டத்திற்காக ₹20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. அந்த நிதியை முதல்வர் ஜெகன்மோகன் மகளிர் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் அவரது வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். ஒரு வருடத்தில் 600 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதில், 160 பேர் உயிரிழந்துள்ளனர். திஷா சட்டத்தால் பெண்களுக்கு எவ்வித பயனுமில்லை. முதல்வர் ெஜகன்மோகன் கட்சிக்கு வாக்களித்தால் மீண்டும் மின் கட்டணம், பேருந்து கட்டணம், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயரும்.

வரும் 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக சந்திரபாபு பதவியேற்பார். பின்னர், ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகள் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். இந்த பேரணியில் எம்எல்சி துரைபாபு, தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் நானி, துணை தலைவர் காஜூர் பாலாஜி, இளைஞர் அணி தலைவர் ராஜேஷ், முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு நாரா லோகேஷ் தங்கினார்.  இன்று காலை கங்காதரநெல்லூர் சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

Related Stories: