கல்வியே பெண்களை பாதுகாக்கும்-குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறிவுரை

திருப்பூர் : வளரிளம் பெண்களின் தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட கலைப்பயணம் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை ரத்தினம் வரவேற்றார். சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மைய (சிஎஸ்இடி) செயல் இயக்குநர் நம்பி அறிமுக உரையாற்றினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

இதையடுத்து மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் பொம்மலாட்டத்தை துவக்கி வைத்து  பேசுகையில், நாம் எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும், படிப்பு தான் அழியாத  சொத்து. அதை நீங்கள் உணர்ந்து நன்றாக படிக்க வேண்டும். எங்கள் காலத்தில்  பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால், பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.  இப்போது அப்படி இல்லை. அரசு உங்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. எந்த  பிரச்னை வந்தாலும் தைரியமாக அதை எதிர்கொள்ள வேண்டும்.

அதற்கு உங்களுக்கு  கல்வி மிக முக்கியம்’’ என்றார்.தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) நித்யா பேசியதாவது: 18 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பும் எங்கள் கையில் இருக்கிறது. நாங்கள் மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியாது. குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக நாம் இருக்க வேண்டும் என்றால் நமக்கு கல்வி மிக முக்கியம். நன்றாக படித்திருத்தால் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும். எது தவறு, எது சரி என்பதை நாம் கற்கும் கல்வி மூலமே தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு வீட்டில் பெண் குழந்தை கல்வி கற்றால், அந்த குடும்பமே படித்தற்கு சமம். ஆகவே படிப்பின் அவசியத்தை உணர்ந்து நன்றாக படித்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். படிக்காமல் போய்விட்டால் என்னென்ன அசம்பாவிதங்கள் நடக்கும் என்பதை ஒவ்வொருவரும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

திருப்பூரில் பள்ளி விடுமுறை நாட்களில் வேலைக்கு போகலாம் என நினைத்து சிலர் போகிறார்கள். உங்களுக்கு 100 ரூபாய் கிடைக்கும்போது, அது பெரிதாக தெரியும். தொடர்ந்து வேலைக்கு போகும்போது அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு  அமர்த்துவது சட்டப்படி குற்றம். அதனால் உங்கள் ெபற்றோர் உங்களை வேலைக்கு போக சொன்னால், அவர்களிடம், நாங்கள் வேலைக்கு போனால் உங்களுக்கும் பிரச்னை, எங்களுக்கும் பிரச்னை, வேலை கொடுத்தவர்களுக்கு பிரச்னை ஏற்படும் என்பதை அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

நாம் படிப்பதற்கு புத்தகம், பை, மதிய உணவு என நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தருகிறது. உங்களுக்கு படிக்க முடியாத அளவுக்கு வேறு எந்த பிரச்னை ஏற்பட்டாலும், உங்கள் பள்ளி ஆசிரியர்களிடமோ அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கோ தெரியப்படுத்தலாம். அதன் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை தைரியமாக வெளிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

Related Stories: