அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரசாரம் செய்வாரா?.. தமிழ் மகன் உசேன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஓபிஎஸ்சை அழைப்பது குறித்து, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக வேட்பாளர்களை அறிவிப்பதில் குழப்பம் நீடித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவத்துடன் நேற்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லி சென்றார்.

அங்கு, தேர்தல் ஆணையத்திடம் படிவத்தை சமர்பித்து விட்டு நேற்று நள்ளிரவு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ்சை பிரசாரத்திற்கு அழைப்பது குறித்து, கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என தமிழ்மகன் உசேன் பேசியுள்ளார்.

Related Stories: