மாவட்டத்தில் பேக்கரி உள்ளிட்ட கடைகளில் தயாரிப்பு, காலாவதி தேதிகள் இல்லா உணவுகள்

*மக்களை ஏமாற்றும் போக்கு அதிகரிப்பு

*தீவிர சோதனை மேற்கொள்வது அவசியம்

கம்பம் : தேனி மாவட்டத்தில் உள்ள பேக்கரி உள்ளிட்ட கடைகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதுபோல் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

இயற்கை சார்ந்த தேனி மாவட்டம் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையிலும், விவசாயம் சார்ந்த தொழில்களால் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி வருகிறது. மாவட்டத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, பெரு ஹோட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளன. இங்குள்ள ஹோட்டல்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை பெருநகரங்களை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலை அதிக அளவில் காணப்படுகிறது. சாதாரணமாக பெருநகரங்களில் கூட ஐந்து ரூபாய்க்கு வடையும், 8 முதல் 10 ரூபாய்க்கு டீயும் கிடைக்கிறது.

ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள டீக்கடை, ஹோட்டல்களில் டீ 15 ரூபாய்க்கும் வடை 10 ரூபாய்க்கும், சமோசா 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் இனிப்பு பண்டங்களின் விலை ரூ.400 முதல் 800 வரை விற்கப்படுகிறது. கேக் வகைகள் ரூ.700 வரை விற்கப்படுகிறது. இந்த விலை இரு மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்படுகிறது. எந்த ஒரு ஹோட்டல், டீக்கடையிலும் முறையான விலைப்பட்டியல் இல்லை. பேக்கரிகளில் விற்கப்படும் உணவு பண்டங்களுக்கு முறையான தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லை.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சோதனை நடத்துகின்றனர். இருப்பினும் இதுபொன்ற செயல்கள் தொடர்கதையாகவே உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், இங்குள்ள ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை விபர பட்டியல் இல்லை. விலை பட்டியலை வாடிக்கையாளர்கள் காணும் வகையில் வைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியும் அதை முறையாக யாரும் பின்பற்றுவதில்லை. ஹோட்டல் உரிமையாளர்கள் நினைத்த நேரம் உணவு பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள்.

இதனால் வெளியூரில் இருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இங்கு ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டுமே விலை நிர்ணயம் செய்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு உணவுப் பொருட்களின் விலையுடன் அந்த உணவு பொருட்கள் எடையும் சேர்த்து குறிப்பிட்டு விலைப்பட்டியலில் இடம்பெறுகிறது. அதேபோல தேனி மாவட்டத்திலும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விலைப்பட்டியலை தயாரித்து வாடிக்கையாளர்கள் கண்ணில் படும்படி வைக்க ஹோட்டல் உரிமையாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேனி மாவட்டத்தில் உரிய தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாத 2,000 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை விற்பனைக்கு வைத்திருந்தவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. ரசாயனம் கலந்த நிறமிகளின் தீமை குறித்து கடைக்காரர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1,850 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் பேக்கிங்கில் காலாவதி தேதியை பிரிண்ட் செய்திருக்க வேண்டும். கைகளில் எழுதி விற்பதும் சட்டப்படி தவறு. இதை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதிகாரிகள் ஆய்வு ₹5000 அபதாரம்

கம்பத்தில் உள்ள பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாத உணவு பண்டங்களை பறிமுதல் செய்ததுடன், சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட கடைக்காரர்களுக்கு ரூ.5000 வரை அபதாரம் விதிக்கப்பட்டது. கம்பத்தில் சில பேக்கரிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லை என உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி ராகவனுக்கு புகார் வந்தது.

அதனையடுத்து கலெக்டர் சஜீவனா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராகவன் அறிவுறுத்தலின் பேரில் கம்பம் நகரில் உள்ள முக்கிய பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன், ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர், சின்னமனூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ்கண்ணன். ஆகியோர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முறையாக தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாத பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் தலா ரூ.5000 அபராதம் விதித்தனர்.

கையுறைகள் அணிவதில்லை

அரசு சட்ட விதிகளின்படி ஹோட்டல் மற்றும் டீக்கடை, பேக்கரிகளில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். இது உணவுப் பொருட்களின் மீது முடி உதிர்ந்து விழாமல் தடுக்கிறது. உணவுப் பதார்த்தங்களை கையால் எடுக்காமல் உரிய கரண்டிகள் மூலம் எடுத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில கடைகளில் மட்டுமே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. பிறவற்றில் பெரும்பாலும் இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. விதிகளை முறையாக பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலாவதி தேதி இல்லை

உணவு பண்டங்களின் மீது விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இடம்பெற வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் பெரும்பாலான கடைகளில் உள்ள உணவு பொருட்களின் மீது இந்த விபரங்கள் இருப்பதில்லை. அதேபோல் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள், கெமிக்கல்கள், அஜினமோட்டோ போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஹோட்டல்களில் ஆடு, மீன் மற்றும் கோழிக்கறியை பல நாட்கள் ஃப்ரீஸரில் வைத்து பயன்படுத்துகின்றன. இது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும் தொடர் சோதனை இல்லாததால் இவர்கள் தப்புகின்றனர்.

Related Stories: