ஊத்தங்கரையில் பரபரப்பு அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டுகள் உடைப்பு

*கொள்ளை கும்பல் பற்றி விசாரணை

ஊத்தங்கரை : ஊத்தங்கரையில், அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை நான்கு ரோடு பகுதியில், ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இங்குள்ள அரசு மருத்துவமனை அருகே, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரிக் கடைகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் உள்ளன. நேற்று காலை அடுத்தடுத்து உள்ள கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், உரிமையாளர்கள் கடைக்கு விரைந்தனர்.

அப்போது, 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பணம் எதுவும் சிக்காததால், அங்கிருந்து ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆராய்ந்து, மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து  வருகின்றனர்.

Related Stories: