மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்

*24ம் தேதி வரை நடக்கிறது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்தார். இப்போட்டிகள் 6ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.  

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நீலகிரி மாவட்ட பிரிவின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பொது பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்று திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிாிவுகளில் 40க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 6ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடைபெறும் எனவும், நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நேற்று ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று பலூன்களை பறக்க விட்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் மற்ற துறைகளை போன்றே விளையாட்டு துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அதனடிப்படையில் இன்று (நேற்று) போட்டிகள் துவக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் நடக்கிறது. கால்பந்து, தடகளம், இறகுப்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், கிரிக்கெட், ஹாக்கி, கையுந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. எனவே அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: