காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஒவ்வொரு நாளும் 1000 மூட்டைகள் கூட நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 10.50 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. அவற்றில் இதுவரை 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுவிட்டன.

மீதமுள்ள 7 லட்சம் ஏக்கரில், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் அடுத்த சில நாட்களில் அறுவடை செய்யப்படவுள்ளன. அறுவடை தீவீரமடைந்திருப்பதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிக அளவில் நெல் வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், கொள்முதல் தீவிரமடையாததால் லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: