100 சதவீத இலக்கை எட்டி சாதனை அட்மா திட்டத்தில் 3480 விவசாயிகள் பயன்

*வேளாண் அதிகாரி தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அட்மா திட்டத்தில் 100 சதவீத இலக்கை முடித்து, 3480 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2005ம் ஆண்டு முதல் அட்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை, விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கிறது.

அட்மா திட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து, அவ்வப்போது பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கற்றுதரப்படுகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அட்மா திட்டத்தில் 100 சதவீத இலக்கை முடித்து, 3480 பேர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகம்மது அஸ்லம் கூறியதாவது; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அட்மா திட்டத்தில் கடந்த ஏப்ரம் 1ம் தேதி முதல் தற்போது வரை, 192 பயிற்சிகள் மூலம் 3480 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதன்படி, உள்மாநில விவசாயிகளுக்கு ₹2 லட்சத்து 40 ஆயிரம் செலவிலும், உள் மாவட்ட விவசாயிகளுக்கு ₹3 லட்சம் செலவிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ₹4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 120 செயல்விளக்க திடல்களும், வெளி மாநில விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் ஒரு நபருக்கும், வெளி மாநில விவசாயிகள் பயிற்சி ₹1 லட்சம் மதிப்பிலும், உள் மாநில விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா ₹1 லட்சம் மதிப்பில் 2 பயிற்சியும், உள் மாவட்ட கண்டுணர்வு சுற்றுலா 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 30 பயிற்சியும் நடத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, ₹1 லட்சம் செலவில் மாவட்ட அளவிலான கண்காட்சியும், ₹20 ஆயிரம் மதிப்பில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 2 முறையும், ₹58,800 மதிப்பில் 2 பண்ணைப்பள்ளிகளும், ₹20 ஆயிரம் மதிப்பில் விளம்பர பலகை என கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஏப்ரல் (2023) வரை 192 பயிற்சிகள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹20 லட்சத்து 8 ஆயிரத்து 800 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை, 192 பயிற்சிகள் மூலம் 3480 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: