தட்டார்மடம் பகுதியில் அடிக்கடி மாயமாகும் டவுன் பஸ்சால் மாணவ, மாணவிகள் அவதி

சாத்தான்குளம் : தட்டார்மடம் பகுதியில் அடிக்கடி கட் அடிக்கும் டவுன் பஸ்சால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். தட்டார்மடம் பகுதியில் கொம்மடிக்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சி சங்கரா பகவதி மேல்நிலைப்பள்ளி,  கலை அறிவியல் கல்லூரி உள்ளன. மேலும் சொக்கன்குடியிருப்பில் மேல்நிலைப்பள்ளி, படுக்கப்பத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளன.இப்பள்ளிகளில்  படிக்கும் அப்பகுதி மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் பயணித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் வசதிக்காக திசையன்விளை பணிமனையில் இருந்து தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை வழியாக திருச்செந்தூருக்கு அரசு டவுன் பஸ் தடம்  எண் 19யு இயக்கப்பட்டு  வருகிறது. இந்த பஸ்  காலை, மாலை இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் பெரிதும்  பயன்அடைந்து வருகின்றனர். ஆனால் இந்த டவுன் பஸ் திடீரென வராமல் கட் அடித்து விடுகிறது.

இதனால் இந்த எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள், மற்றும் பொது மக்கள் அடுத்து வரும் தனியார் பஸ்சில் முன்டியடித்தும், கூட்டம் மிகுதியால் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு  வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பள்ளி நேரத்தில் தடம் எண் 19யு அரசு பஸ்சை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் காலை,  மாலை வேளைகளில் தட்டார்மடம் பகுதியில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: