குளத்தூர் அருகே வேப்பலோடையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குளத்தூர் : வேப்பலோடையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். குளத்தூர் அடுத்த வேப்பலோடை கிராமத்தைச் சுற்றி கல்மேடு, பனையூர், துரைச்சாமிபுரம், பாலார்பட்டி, சக்கம்மாள்புரம் என பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உப்பளம் மற்றும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இக்கிராமத்தில் இருந்து தொடக்கப்பள்ளி முடித்து மேற்கொண்டு மேல்நிலை கல்விக்காக வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு இக்கிராம பகுதி மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமபுற மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி மட்டுமில்லாது கபடி, வாலிபால், கிரிக்கெட், அத்லடிக் என பல்வேறு விளையாட்டுகளில் திறமை படைத்தவர்களாக உள்ளனர்.

இருப்பினும் விளையாட்டுகளில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல இக்கிராமத்தில் போதிய விளையாட்டு மைதான வசதி இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள் விளையாட்டுகளில் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர முடியாமல் அப்படியே முடங்கி போகின்றனர். இதனிடையே மாணவர்கள், கல்லூரி படிப்பு முடித்த இளைஞர்கள், விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுள்ள பொதுமக்கள் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் பரிசுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆர்வத்துடன் அதிக முறை நடத்திவருகின்றனர். ஆனால், மைதான வசதி என்பது முற்றிலுமாக இல்லை என்பது அவர்களை சோர்வடைய செய்கிறது. மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்க நிர்வாகிகள் இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரி மனுக்கள் அளித்த வண்ணம் உள்ளனர். ஆனால் இது வரை விளையாட்டு மைதானம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுத்தபாடில்லை என வேதனையாக தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்க நிர்வாகி ஜேம்ஸ் அமிர்தராஜ் கூறுகையில் ‘‘ வேப்பலோடை மற்றும்  இப்பகுதி சுற்று வட்டார மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கபடி, கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, அத்லெடிக் போன்ற விளையாட்டுகளில் திறமை படைத்தவர்களாக இருந்த போதிலும் மேற்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்லவும் விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்து விட்டோம்.

ஆனால் போதிய இட வசதி இருந்தும் விளையாட்டு மைதானம் அமைக்க இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் விளையாட்டு மைதானம் இல்லாததால் இளைஞர்களுக்கு போதிய பயிற்சியின்றி உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம புற இளைஞர்கள் விளையாட்டுகளில் சாதிக்க போதிய மைதான வசதி அமைத்து தர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: