ஆந்திர மாநிலம் திருப்பதியில் பரபரப்பு கல்லூரி தங்கும் அறையில் மாணவன் தற்கொலை

* அதிர்ச்சியில் மயங்கி விழுந்த வார்டன் மரணம்

* ஆத்திரத்தில் விடுதியை சூறையாடிய உறவினர்கள்

திருமலை : திருப்பதியில் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட வார்டன் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணமடைந்தார். மேலும், மாணவர் தற்கொலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகம் என்று கூறி உறவினர்கள் விடுதியை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம், ஒஎஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள வெமுலா அடுத்த நாரேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணா-கங்கம்மா தம்பதியின் மகன் தரணேஷ்வர். இவர் திருப்பதி மாவட்டம், கூடூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி கல்லூரி விடுதியில் உள்ள தனது அறையில்   தரணேஷ்வர் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதைப்பார்த்த சக  மாணவர்கள் விடுதி வார்டன் சீனிவாசலுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசலு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை மாணவர்கள் மீட்டு கூடூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சீனிவாசலு மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருப்பதி முதலாவது நகர போலீசார் வழக்குப்பதிந்து கல்லூரி மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் தரணேஷ்வர் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.இதனை அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் கல்லூரிக்கு வந்தனர். மேலும் தங்கள் பிள்ளையை கல்லூரி நிர்வாகம் கொன்றதாக கூறி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அப்போது, ‘கல்லூரி நிர்வாகம் பெற்றோர் வரும் வரை காத்திருக்காமல் எங்களது மகன்   சடலத்தை விடுதி அறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எங்கள் குடும்பத்தில் எந்தவித பிரச்னையும் இல்லை. கல்வி கட்டணம் தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து துன்புறுத்தியுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகள் எங்களிடம் இருக்கிறது’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ​​விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலிகள், கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதுகுறித்து தகவலறிந்த முதலாவது நகர காவல் நிலைய  எஸ்ஐ பவன்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அவர்களிடம் உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.  இதனையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், கல்லூரி நிர்வாகம் மீது பெற்றோர்  அளித்த புகாரின்பேரில்  வழக்குப்பதிந்து செய்துள்ளனர்.

Related Stories: