சுங்கச்சாவடி தடுப்பு கேட்டை உடைத்து சென்ற பார்சல் சர்வீஸ் லாரியால் பரபரப்பு

*போதையில் திருடி சென்ற நபர் கைது

திண்டிவனம் : அச்சரப்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியை கடத்திச் சென்ற நபர், சுங்க சாவடியின் தடுப்பு கேட்டை உடைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பார்சல் சர்வீஸ் லாரி சென்றுள்ளது. லாரியை திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ரங்கன் மகன் சரவணன்(32), என்பவர் ஓட்டி சென்றார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, வாகனத்திலேயே சாவியை வைத்துவிட்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்.

 அப்போது பார்சல் சர்வீஸ் லாரியை அங்கிருந்து மர்மநபர் ஒருவர் திருடிக் கொண்டு தப்பி சென்றார். அவர் விழுப்புரம் மார்க்கமாக தப்பி செல்லும்போது ஓங்கூர் சுங்கச்சாவடியின் தடுப்பு கேட்டை உடைத்துக் கொண்டு அதிவேகமாக தப்பி சென்றார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் திண்டிவனம் ஜக்காம்பேட்டை பகுதியில் திருடி சென்ற லாரியை மடக்கி பிடித்தனர்.

 அப்போது லாரியை திருடி சென்ற நபர் தப்பிக்க முயன்றார். அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்த போலீசார், பார்சல் சர்வீஸ் லாரி மற்றும் லாரி திருடிய நபரை திண்டிவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த வடக்கு கள்ளிகுளம் பகுதியை சேர்ந்த அப்பாவு தேவன் மகன் சோமசுந்தரம்(36), என்பதும், மது போதையில் வாகனத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. பின்னர் அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: