வேடசந்தூர் அருகே நிலா பெண்ணாக தேர்வு பெற்ற சிறுமிக்கு வழிபாடு

வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நிலா பெண் வழிபாடு நடக்கும். இதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட சிறுமியை தேர்வு செய்வர். சிறுமிகள் அதிக அளவில் இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வாகும் ஒரு சிறுமி, நிலா பெண்ணாக அறிவிக்கப்படுவார்.அந்த சிறுமியை நிலா பெண்ணாக அலங்காரம் செய்து மற்ற சிறுமிகள் ஒன்று கூடி, அம்மன் கோயிலில் இரவு தொடங்கி அதிகாலை வரை வழிபடுவர்.

ஒவ்வொரு தை மாத பவுர்ணமி அன்று இந்த நிகழ்வானது நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருடம் கார்த்திகேயன் - மேகலா தம்பதியின் மகள் சர்வ அதிஷ்டா (10), நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு புத்தாடைகள் அணிவித்து அங்குள்ள மாடச்சி அம்மன் கோயிலில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க சரளைமேடு பகுதிக்கு பெண்கள் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆவாரம்பூ மாலையிட்டு ஆவாரம் பூக்கள் அடங்கிய கூடையை தலையில் வைத்து ஆட்டம், பாட்டத்துடன் அழைத்து வந்தனர். அதன் பிறகு மாரியம்மன் கோயில் முன்பாக சிறுமியை வைத்து பெண்கள் வட்டமிட்டு கும்மியடித்து மகிழ்ந்தனர்.

பின்னர் விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் மாடச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். நிலா பெண்ணின் தாய் மாமன் கட்டிய பச்சை தென்னங்கீற்று குடிசையில் அமர வைத்து மீண்டும் கும்மியடித்து பாட்டு பாடினர். ஒவ்வொரு சிறுமிகளும் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவை நிலா பெண்ணுக்கு கொடுத்தும் அதனை தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். இரவு முழுக்க நடக்கும் இந்த திருவிழாவில் விடியற்காலையில், சிறுமி கொண்டுவந்த ஆவாரம் பூக்கூடையை, தீபச்சட்டியை வைத்து தீபம் ஏற்றி அதனை நீர் நிறைந்த கிணற்றில் மிதக்க விடுவார்கள். இந்த திருவிழாவின் மூலம் மழை வளம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories: