ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலங்கள், கேரட் சுத்திகரிப்பு மையங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா?

*அதிகாரிகள் திடீர் ஆய்வால் பரபரப்பு

ஊட்டி :  ஊட்டி மற்றும் கேத்தி பாலாடா பகுதிகளில் விளை நிலங்கள், கேரட் அறுவடை பணிகள், சுத்திகரிப்பு மையங்களில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்களா? என தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் தனியார் தேயிலை எஸ்டேட்கள், மலைக்காய்கறி விவசாய பணிகள், கட்டுமான பணிகள், ஊட்டி, குன்னூர் போன்ற நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், உணவகங்களில் ஜார்க்கண்ட், மேற்குவங்கம், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், மேகாலயா போன்ற பகுதிகளை சேர்ந்த ஏராளமான வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில், அதிக கூலியை எதிர்பார்க்காமல், குறைந்த கூலியை பெற்று கொண்டு அதிக நேரம் பணியாற்றுவது உள்ளிட்ட காரணங்களால் அனைத்து பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் காணப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் முழுவதும் வடமாநிலத்தினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 18 வயது பூர்த்தியடையாத வடமாநில தொழிலாளர்கள் பலர் குழந்தை தொழிலாளர்களாக மலைக்காய்கறி விவசாய பணியிலும், காய்கறிகளை சுத்தம் செய்து அனுப்பும் பணியிலும் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையர் சதீஸ்குமார் தலைமையில் தொழிலாளர் துறையினர், சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களை கொண்ட ஒருங்கிணைந்த மாவட்ட தடுப்பு படையினர் ஊட்டி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கேத்தி பாலாடா பகுதியில் மலைக்காய்கறி விவசாயம் செய்யும் விளைநிலங்கள் மற்றும் கேரட் கழுவி சுத்தம் செய்யும் இடங்களில் கடந்த ஒரு வாரமாக அதிகாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மலைக்காய்கறி அறுவடை பணி மற்றும் காய்கறி சுத்தம் செய்யும் பணிகளில் வடமாநில குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது தொியவந்தது. ஆய்வின்போது கேரட் அறுவடை செய்யும் இடங்கள் மற்றும் சுத்திகரிப்பு மையங்களின் உரிமையாளர்களிடம் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது எனவும், அவ்வாறு பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் கூறுகையில், ‘‘குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பணியமர்த்தினால் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கையில் தண்டனையாக குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு குறையாமலும், அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதமாக ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமலும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விதிக்கப்படலாம் அல்லது சிறை தண்டனை மற்றும் அபராத தொகை இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படலாம். தொழிலாளர் துறை சார்பில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்’’ என தெரிவித்தார்.

நாய் பண்ணையில் 16 வயது சிறுவன் மீட்பு

ஊட்டி அருகே ஒரு தனியார் நாய் பண்ணையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது 16 வயது சிறுவன் வளரிளம் பருவ தொழிலாளராக பணியாற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுவன் மீட்கப்பட்டார். இது தொடர்பாக குழந்தை மற்றும் வளரிள தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் விதிகள் 1988, திருத்தச்சட்டம் 2017 பிரிவு -3(பி)ன் படி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியாருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: