ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனு தாக்கல்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக, தேமுதிக மனுதாக்கல் செய்த நிலையில் அதிமுகவும் மனுத்தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக தொடங்கியது. மணல்மேடு பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடங்கினார். முதலில் அங்குள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அதன் பின்னர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. இதுவரை மொத்தம் 60 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10ம் தேதி கடைசி நாளாகும்.

எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக தனித்து போட்டியிடுகின்றன. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories: