துருக்கி நாட்டிற்கு இந்தியா உதவிக்கரம் : மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்களுடன் விமானத்தை அனுப்பியது!!

துருக்கி : பூகம்பத்தால் கடும் சேதங்களை சந்தித்துள்ள துருக்கி நாட்டில் மீட்புப் மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில் பேரிடர் மேலாண் படை வீரர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நூற்றாண்டுகளில் காணாத அளவிற்கு 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பத்தால் துருக்கி, சிரியா நாடுகள் அதிர்ந்தன. அதனையடுத்து நேரிட்ட மேலும் 2 நிலநடுக்கத்தால் துருக்கியின் ஹத்தே நகரமே உருக்குலைந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளை போல் சரிந்தன. இடிபாடுகளில் சிக்கி 4,000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் துருக்கி ராணுவம் ஈடுபட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்திய பேரிடர் மேலாண் படையைச் சேர்ந்த 101 வீரர்கள் அடங்கிய 2 குழுக்கள் விமானப்படையின் சி17 விமானம் மூலம் துருக்கி விரைந்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய பேரிடர் மேலாண் படையினர் துருக்கி ராணுவத்திற்கு உதவி செய்ய உள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் மற்றும் இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Related Stories: