சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: புகை மண்டியது போல் காட்சியளித்த சாலைகள்.. வாகன ஓட்டிகள் அவதி..!!

சென்னை: சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிலவிய மூடு பனியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் குளிருடன் பனிமூட்டம் நிலவியது. இதனால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சாலையில் மெதுவாக சென்றனர். காலை 6 மணி வரை இதே நிலை தொடர்ந்ததால் நடைப்பயிற்சி மற்றும் அத்தியாவசிய பணிக்கு புறப்பட்டு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் பனிமூட்டம் நிலவியது. கட்டிடங்கள், சாலைகள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி மூடியிருந்தது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலும் பனிமூட்டம் நிலவியது. பொழுது விடிந்து வானம் தெளிவாக காட்சியளித்த நிலையிலும் காலை திடீரென கோயில் கோபுரங்களை மறைக்கும் அளவிற்கு பனி மூடியது. இதனை போலவே பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கடும் பனி மூட்டம் நிலவியது. பட்டுக்கோட்டையில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் சென்றன.

Related Stories: