புற்று நோயால் அவதிப்படும் உம்மன் சாண்டிக்கு சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் மறுப்பா?: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: புற்று  நோயால் அவதிப்பட்டு வரும் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு  குடும்பத்தினர் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மிகவும்  மோசமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதில் எந்த உண்மையையும் இல்லை  என்று பேஸ்புக் மூலம் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் உம்மன் சாண்டி.  கடந்த 2004 முதல் 2006ம் ஆண்டு வரையிலும், 2011 முதல் 2016ம் ஆண்டு  வரையிலும் 2 முறை முதல்வராக இருந்து உள்ளார். 2006 முதல் 2011 வரை  எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம்  புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்எல்ஏவாக  இருந்து வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில்  உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக கடந்த சில  மாதங்களுக்கு முன்பு ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர்  பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார்.  இந்தநிலையில் உம்மன் சாண்டியை அவரது மனைவி, குடும்பத்தினர் சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மிகவும்  மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. இது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆனால் அதை உம்மன் சாண்டி தற்போது மறுத்து உள்ளார். அவரது  மகன் சாண்டி உம்மனின் பேஸ்புக் மூலம் நேரலையில் வந்த அவர் கூறியது: எனக்கு  சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் மறுப்பதாக வெளியான தகவல்களில் எந்த  உண்மையையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: