உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் 5 பேர் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான  கொலிஜியத்தின் கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதி கூடிய போது, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் செயல்பட வேண்டும். தற்போது தலைமை நீதிபதி உள்பட 27 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஏழு பணியிடங்கள் காலியாக இருக்கிறது என தெரிவித்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக ஐந்து நீதிபதிகளின் பெயர்களை தேர்வு செய்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதில்,‘‘ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார்,  பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க கொலிஜியம் அப்போது பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து, நீண்ட கால மாத இடைவெளிக்கு பிறகு மேற்கண்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கடந்த வாரம் ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருந்தது.

இதைத் தொடர்ந்து அதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஒப்புதல் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், 5 புதிய நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நீதிபதிகளின் இடம் தற்போது வரையில் காலியாக உள்ளது.

Related Stories: