அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் கடும் வாக்குவாதம் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: அதிகாரி மன்னிப்பு கேட்டதால் சமரசம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு வழி விடாத அரசு பஸ் டிரைவர், ராணுவ அதிகாரியால் தாக்கப்பட்டார். தட்டிக்கேட்ட பொதுமக்களை துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.  மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள், அதிகாரி பிரசாந்த் தர்மா தலைமையில், நேற்று வேலூரில் இருந்து 2 கனரக வாகனங்களில், ராணுவ தளவாடங்களை ஏற்றிக் கொண்டு, பெங்களூருவுக்கு புறப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று பிற்பகல் அந்த வாகனங்கள் வந்தன. அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ராணுவ வாகனத்திற்கு வழி விடாமல், டிரைவர் தமிழரசு பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது.

 பலமுறை ஹாரன் அடித்தும் வழி விடாததால், துணை ராணுவ வீரர்கள் முந்திச் சென்று பஸ்சை வழி மறித்தனர். இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர் தட்டிக்கேட்டபோது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராணுவ அதிகாரி, திடீரென டிரைவர் தமிழரசுவை சரமாரியாக தாக்கினார். இதனால், தமிழரசு பஸ்சை எடுத்துச்சென்று ராணுவ வாகனத்தின் குறுக்கே நிறுத்தினார். அவருக்கு ஆதரவாக பயணிகள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்துதுணை ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். உடனே, வாகனத்தில் இருந்து இறங்கிய துணை ராணுவ வீரர்கள் 5 பேர், ‘அனைவரும் கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் சுட்டு விடுவோம்’ என்று கூறி துப்பாக்கியை தூக்கி காண்பித்துள்ளனர். இதனால், மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாகூரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, துணை ராணுவ வீரர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே, இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, டிரைவர் மற்றும் பொதுமக்களிடம், ராணுவ அதிகாரி பிரசாந்த் தர்மா மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து ராணுவ தளவாட வாகனங்கள் அங்கிருந்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர்.

Related Stories: