கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் மனைவி நீதிபதியிடம் வாக்குமூலம்: 3 மணி நேரம் சைகையில் விளக்கம்

கோவை: கோவையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்து துணி வியாபாரி ஜமேஷா முபின் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் நேற்று சூலூரில் உள்ள ராணுவ வெடிமருந்து திரி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிக்க வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டது. ஜமேஷா முபின், 2017ல் காது கேட்காத, பேச முடியாத மாற்று திறனாளி பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேஷா முபின் இறந்த பின்னரே அவரின் செயல்பாடுகள் மனைவிக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று கோவை ஜே.எம்.எண் 4 கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஜமேஷா முபினின் மனைவி ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் வேறு நபர்கள் அனுமதிக்கப்படவில்லை. சைகை மொழியில் நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜமேஷா முபினின் மனைவி ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டது. சைகை மொழியில் தகவல் பெற, சைகை மொழி பெயர்ப்பாளர் உடன் இருந்தார். மாலை  3.45 மணியில் இருந்து மாலை 6.45 மணி வரை 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

Related Stories: