நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.17.80 கோடியில் புவியியல் தகவல் நிலையம்: முதல்வர் உத்தரவு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் அமைக்க ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையான குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளின் விவரங்களை, புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் தயாரிப்பதற்கு, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற  முன்னணி முதலீட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அனைத்து கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றத்தை மேலாண்மை செய்வதற்காக, அம்ரூத் 2.0 திட்டத்தின் நிர்வாக மற்றும் அலுவலக செலவு நிதியின் கீழ் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாரிய தலைமையகத்தில், அர்ப்பணிக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் அமைக்க ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினால் உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டச் செலவு, புவியியல் தகவல் அமைப்பு சர்வர் வன்பொருள் மற்றும் மென்பொருள், ஜியோ-ஸ்பேஷியல் சர்வர் மென்பொருள், கணக்கெடுப்பு கருவிகளின் கொள்முதல், புவியியல் தகவல் அமைப்பு குழுவிற்கான பணியாளர் செலவு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு அறையை அமைப்பதற்கான உட்கட்டமைப்பு செலவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கட்டமைப்புகளின் தகவல்கள் உயர் துல்லியத்துடன் உருவாக்கப்படும் மற்றும் உருவாக்கப்பட்ட தகவல்கள் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் சேமிக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை கொண்டு பணிகளை திட்டமிடல், பொது சேவை வசதிகள், அன்றாட தகவல்களை மேம்படுத்த இயலும். இத்திட்ட செயலாக்கம், வாரியத்தின் வருவாயை மேம்படுத்தவும், செலவினங்களை குறைக்கவும் ஏதுவாக அமையும்.

Related Stories: