சென்னை: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், எடப்பாடி அணியால் அறிவிக்கப்பட்ட தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்களது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக உள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு அணிகள் சார்பிலும், தனித்தனியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி அணி சார்பில், வழக்கு தொடரப்பட்டது. அவர் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்ச நீதிமன்ற தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவை கூட்டி, வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கருத்தையும் கேட்டு ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசை முறைப்படி பூர்த்தி செய்து 5ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு, கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அவை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தடைந்துள்ளன. மொத்தமுள்ள 2,750 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,500 பேருக்கு மேற்பட்டவர்கள் எடப்பாடி அணி சார்பில் நிறுத்தப்பட்ட தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து பேசி, அதிமுக சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தார். பாஜவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ், இரண்டு நாட்களுக்கு முன், ‘இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம்’ என்றார். நேற்று முன்தினம் தனது கருத்தை மாற்றிக் கொண்டு, ‘தமிழ்மகன் உசேன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படாமல், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார். விண்ணப்ப படிவத்தில் ஒரு வேட்பாளர் பெயரை மட்டும் குறிப்பிடுவது தவறு. எங்கள் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்தி, அவரும் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய படிவத்தில் எங்கள் அணி வேட்பாளர் செந்தில்முருகன் பெயர் இடம் பெறவில்லை. இதுபற்றி அவைத்தலைவர் எங்களிடம் கலந்து பேசி இருக்க வேண்டும். அதனால் இதுபற்றி தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடுவோம்’ என்றனர். இதனால், அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.இந்த சூழ்நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், நேற்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் சி.வி.சண்முகமும் உடன் சென்றார். அவர்கள், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை நேற்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர். அந்த கடிதத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி அணி சார்பில் அறிவித்த, தென்னரசுவை ஆதரித்து இருந்ததால், அவரே அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் கு.ப.கிருஷ்ணன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறும்போது, ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவை ஏற்று, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது அணி வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெறுவார். இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடக்கப்பட கூடாது என்பதே எங்கள் நோக்கம். இந்த நோக்கத்திற்காக செந்தில்முருகன் தேர்தலில் இருந்து விலகுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். இதன்மூலம் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று எடப்பாடி அணியினருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதனால் அவர்களின் கை ஓங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். அதன்படி எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.