சென்னை: மின்வாரிய பணியாளர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். தொடர்பு இல்லாத ஆதார் எண்ணை இணைக்க கூடாது என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின் வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்.6-ம் தேதி இரவு 7 மணி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 97.98 சதவீதம் பேர் இணைத்துள்ளனர். ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில், உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிகளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது மின்வாரியம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்கள் திட்டத்தின் நோக்கமே வீணாகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து கள பணியாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் மிகக்கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டும். இதில் மின்வாரிய உயரதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, பணிகுறித்த விவரங்களைத் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.