கோயம்பேட்டில் காய்கறிகள் விலை சரிவு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், வரத்து அதிகரிப்பால், அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இவ்விலை சரிவால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் உபி, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் லாரிகளின் மூலம் காய்கறிகள் வருகிறது. நேற்று காலை 600 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வந்தன. இதனால், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.25 லிருந்து ரூ.18க்கும், நவின் தக்காளி ரூ.25 லிருந்து ரூ.20க்கும், பெரிய வெங்காயம் ரூ.25 லிருந்து ரூ.16க்கும், சின்ன வெங்காயம் ரூ.80 லிருந்து ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.80லிருந்து ரூ.50க்கும், கேரட் ரூ.40 லிருந்து ரூ.20க்கும்,  பீன்ஸ் ரூ.35 லிருந்து ரூ.20க்கும் அவரைக்காய் ரூ.35 லிருந்து ரூ.20க்கும், சவ்சவ் ரூ.20 லிருந்து ரூ.12 க்கும், உருளைகிழங்கு ரூ.30 லிருந்து ரூ.22க்கும், பச்சை மிளகாய் ரூ.40 லிருந்து ரூ.25க்கும் பச்சை பட்டாணி ரூ.200 லிருந்து ரூ.35க்கும்  விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல்,  ஒரு கட்டு கொத்தமல்லி மற்றும் புதினா ரூ.5 யில் இருந்து ரூ.1க்கும் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.50 யில் இருந்து ரூ.30க்கும் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150 லிருந்து ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெண்டை, கேரட் போன்ற அனைத்து காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை குறைந்தாலும், காய்கறிகளை வாங்க சென்னை புறநகர் வியாபாரிகள் குறைவாகவே வந்தனர். இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேவேளையில், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலைக்குறைவு இன்னும் ஒரு மாதம் நீடிக்கும்.’’இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: