ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளரை அதிமுக கட்சியின் பொதுக்குழுவே முடிவு செய்யும். அதனை இறுதி செய்து அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் முடிவை தெரிவிப்பார்’ என கடந்த 3ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு தரப்பில் சுற்று அறிக்கை மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அடங்குவார்கள்.  

இந்த நிலையில் டெல்லி சென்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று  தேர்தல் ஆணையத்தில் விரிவான ஆவணங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கே.எஸ்.தென்னரசுவை  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பொதுக்குழு தேர்வு செய்துள்ளது’’ என தெரிவித்தார்.இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம் எம்.பி கூறுகையில், ‘‘அதிமுகவின் மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2665 ஆகும். அதில்  மாற்று கட்சிக்கு போன 2 பேர், இறந்து போன 15 பேர் உள்பட 19 பேர் வாக்களிக்க முடியாது. இதையடுத்து 2646 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர். அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு முன்வைத்த அவை தலைவருடைய ஒப்புதலுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை முன்பு மொழியப்பட்டது.  

அதன் ஒப்புதலுக்கான விண்ணப்பங்கள் நேரிலும், வாட்ஸ் அப்பிலும், மின்னஞ்சல் மற்றும் விரைவு தபால் மற்றும் பதிவு தபாலிலும் அனுப்பப்பட்டது. இதையடுத்து மொத்தம் 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் தென்னரசுவை வேட்பாளராக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஈரோடு இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசுவை அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். இதையடுத்து அதனை பரிசீலனை செய்யும்  தேர்தல் ஆணையம், இறுதி உத்தரவை மாநில தேர்தல் அதிகாரிக்கு விரைவில் அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

இந்த நிலையில்  தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ‘அதிமுக வேட்பாளருக்கான  படிவங்களில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்ட படிவங்களை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்டது.   இந்த உத்தரவு என்பது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.

Related Stories: