கிரீன் ஹைட்ரஜன் உற்பத்திக்கு ரூ.8 லட்சம் கோடி முதலீடு பெற இலக்கு: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம் சார்பில் ‘‘இண்டியா எனர்ஜி வீக்-2023’’ கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் துவக்க விழாவில் ஆளுநர் தாவர்சந்த்கெலாட், முதல்வர் பசவராஜ்பொம்மை, ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொண்டனர். விழாவில்  பிரதமர் மோடி பங்கேற்று எரிசக்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார். நவீன சோலார் அடுப்பு,  பயோ பெட்ரோல் பங்க், எலக்ட்ரிக் வாகனங்களைஅறிமுகம் செய்தார்.

பிரதமர் பேசும்போது, ‘மாறி வரும் உலக சூழ்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எரிசக்தி உற்பத்தியை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதை கருத்தில் கொண்டு பயோ மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி, காற்றலை மின் உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகனங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பயோ மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

தேசிய ஹைட்ரஜன் மிஷன் என்ற புதிய கொள்கை அறிமுகம் செய்துள்ளோம். வரும் 5 ஆண்டுகளில் கிரின் எனர்ஜியின் பயன்பாடு 25 சதவீதம் உயர்த்தப்படும்.

இதை கருத்தில் கொண்டு கிரின் ஹைட்ரஜன் திட்டத்தை மேம்படுத்த ரூ.8 லட்சம் கோடி தொழில் முதலீடு பெறுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டுமானால், பேட்டரி அவசியமாகும். ஆகவே பேட்டரி உற்பத்திக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதுடன் பேட்டரி தொழில் தொடங்க முன்வருவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். அதேபோல் சோலார் மின் உற்பத்திக்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இதற்காக ‘‘சோலார் வீடு, சோலார் கிராமம்’’ என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றார்.

Related Stories: