போலீஸ் சுற்றிவளைத்தபோது மொட்டை மாடியில் இருந்து குதித்த ரவுடி கை, கால் முறிவு: சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் சுற்றி வளைத்தபோது தப்பி ஓட வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்ததால் அவரது கை, கால் முறிந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு ரவுடி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொடுங்கையூர், வியாசர்பாடி, புழல், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் 10ம்தேதி 10 பேர் கொண்ட கும்பல் சுமார் 5க்கும் மேற்பட்டோரை கத்தியால் வெட்டி வாகனங்களை அடித்து உடைத்து, பொதுமக்களை அச்சுறுத்தியது. இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடியபோது அவர்களில் 4 பேருக்கு கை கால்கள் உடைந்தன. இதில், 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த கலை (எ) கலைச்செல்வன் (21) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வன் வியாசர்பாடி பகுதிக்கு வருவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு அருகே கலைச்செல்வனை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசிடம் இருந்து தப்பிக்க பிஎஸ்என்எல் பழைய குடியிருப்பு மொட்டை மாடியில் இருந்து கலைச்செல்வன் கீழே குதித்தார். அப்போது, அவருக்கு வலது கை மற்றும் இடது கால் முறிந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மாவுக்கட்டு போட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கிஷோர், கேபி அருண் உள்ளிட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: