விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்தது

தாம்பரம்: தாம்பரத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதி நின்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (39), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சிவகாசிக்கு சென்று விட்டு, காரில் நேற்று காலை சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.  தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை நோக்கி வந்தபோது, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை - காந்தி சாலை சந்திப்பில் சிக்னல் போடப்பட்டிருந்ததால், வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக நின்று கொண்டு இருந்தன.

அப்போது, அதி வேகமாக ஸ்ரீதர் ஓட்டி வந்த கார் திடீரென முன்னால் நின்றிருந்த கார் மீது வேகமாக மோதியது. இதில், காருக்கு முன்னால் நின்றிருந்த தனியார் சினிமா நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் மீது, கார் மோதி அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார்  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீதர் ஓட்டி வந்த காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததால், காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினர். இதை தொடர்ந்து, அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரியை போலீசார் மடக்கி நிறுத்தி, தண்ணீர் ஊற்றி காரின் முன் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக, தாம்பரம் - குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: