தாம்பரம் 4வது மண்டல குழு கூட்டம் ரூ.5.51 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டத்தில் ரூ.5.51 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் டி.காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நியமன குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர் உள்பட 4வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலை அமைத்தல், தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் விநியோகம், மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த மண்டல தலைவர் டி.காமராஜ் கோரிக்கைகளுக்கு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை தொடர்ந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மின் மோட்டார்கள் பராமரிப்பு, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், சாலை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், கான்கிரீட் சிறு பாலம் அமைத்தல், ஆழ்துளை கிணறு மற்றும் சிறு மின்விசை பம்ப் அமைக்க, சாலையோர குடிநீர் தொட்டிக்கு அடித்தள மேடை அமைக்க, குடிநீர் குழாய் பதிக்க, நகர் நல மையத்திற்கு பேவர் பிளாக் அமைக்க, சுற்றுச்சுவர் அமைக்க, கல்யாண் நகர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உணவு உட்கொள்ளும் இடத்திற்கு மேற்கூரை அமைக்க, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் பழுதுகள் நீக்க என மொத்தம் சுமார் 5 கோடியே, 51 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 65 தீர்மானங்களுக்கு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது.

Related Stories: