தைப்பூச தினத்தையொட்டி கந்தசாமி கோயில் தெப்ப திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பெரம்பூர்: தைப்பூச தினத்தையொட்டி, ஓட்டேரியில் உள்ள கந்தசாமி கோயிலில் 52வது தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு சுவாமி வீதிஉலா நடந்தது. அதன் ஒரு பகுதியாக ஓட்டேரி குயப்பேட்டையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம்  நடந்தது. இந்த கோயிலில் முருகப்பெருமானின் பக்தரான கிருபானந்த வாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிலிருந்து வருடம் வருடம் தைப்பூச திருநாளில் தெப்பத் திருவிழா தொடர்ந்து 3 நாட்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில்,  நேற்று முன்தினம் காலை கந்தசாமி கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கிய திருவிழாவில், சிறப்பு அம்சமாக மாலை தெப்பத் திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து, கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் சுவாமி திருவீதி உலா வந்தது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிற கோயில்களில் தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை மற்றும் கார்த்திகை தீபம் உள்ளிட்ட நாட்களில் வெகு விமர்சையாக கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் நடந்த தெப்ப திருவிழாவில் ஓட்டேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: