கார் பிரேக் பிடிக்காததால் விபத்து வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ., உள்பட 7 பேர் காயம்: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே, கார் பிரேக் பிடிக்காததால் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் உள்பட 7 பேர் மீது கார் மோதியது. இதில் அனைவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அன்புதாசன் (28) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தங்கசாலை மேம்பாலத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி வந்த ஒரு கார் திடீரென உதவி ஆய்வாளரை இடித்து தள்ளி, ரோட்டில் நடந்து சென்ற 7 பேர் மீது மோதி நின்றது.

தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அடிபட்ட உதவி ஆய்வாளர் உள்பட 7 பேரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, வலது கண் புருவம் மற்றும் உடல் முழுவதும் உள் காயம் அடைந்த எஸ்.ஐ., அன்புதாசன் மற்றும் பலத்த காயம் அடைந்த இருவர் உள்பட 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் உமாபதி (40) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது, கார் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாகவும், தைப்பூசம் என்பதால் குடும்பத்துடன் வடபழனி முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து உமாபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: